தண்ணீர்த் தொட்டி மீன்கள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

இந்தக் கடலின் எந்தக் குபேர மூலையிலும் கிடைக்காத புழுக்கள் வேளை தவறாமல் தானாய் வருகிறது. தெய்வக் கிருபையால் புயல்களும் இல்லை. திமிங்கிலங்களை அவதாரக் கடவுள் காணாமல் செய்துவிட்டார். ஆனால் இன்னும் ஒன்று மட்டும் புரியாத புதிராய் இருக்கிறது. உலகத்தை உதடு குவியப் புணர்கையில் அஃதென்ன இடையில்? அப்புறம் ஒன்று எங்கே எங்கள் முள்ளுச் சூரியன்களும் கள்ளுப் பிறைகளும்?

லாறி / ஞானக்கூத்தன் கவிதைகள்

எங்களூர்ப் புழுதித் தெருமேல் அடிக்கடி ஓடும் லாறிக்கு நைனாச்சாரியார் என்று பெயர் வைத்தார்கள் – இரண்டிடத்திலும் புட்டம் அகலமாய்த் தெரிந்ததால் – புறம்போக்கு மண்ணில் புகைந்த சூளையின் செங்கல்லை வாரித் தொலைவில் விற்று விற்றுக் குதிரை வண்டி குப்பு முதலியைக் குபேரனாக்கிய பெருமை அதற்குண்டு கல்வி கேள்விப் புலமையில் சிறந்தவராக லாறியாரைப் பலபேர் மதித்தார்கள் லாறியாரின் அங்கம் முழுதும் ஆங்கிலம் பொலிந்தது கொஞ்ச நாட்களாய் லாறியார்க்குக் கெட்டப் பேரொன்று சேரத் தொடங்கிற்று லாறி வழங்கிய பெட்றோலிய மூச்சில்… Continue reading லாறி / ஞானக்கூத்தன் கவிதைகள்

எல்லாம் இறுதியில் பழகிப் போய்விடும் / ஞானக்கூத்தன் கவிதைகள்

எல்லாம் இறுதியில் பழகிப் போய்விடும் நினைவில் உள்ளதா ஏமாற்றத்தின் துரோக முட்கள் உன்னைக் கிழித்த அம்முதல் நாளை எப்படி உரக்கக் கூவினாய்! யாரோ கூக்குரல் கேட்டு வருவார் என்பதாய் எவ்வளவு விரைவில் தெரிந்து கொண்டாய் பதிலில்லாக் கேள்வி உன் கூக்குரலென்று கொஞ்சம் கொஞ்சமாய் பழகிப் போய்விடும் எத்தனை குருதி பெருக்கினாய் முதலில் அன்று குத்தப்பட்ட போது இன்றோ உன்னை எங்குக் குத்தியும் சொட்டுக் குருதியும் வெளிப்படவில்லை கூச்சலும் இன்று தவிர்ந்து விட்டது உனக்குத் தெரியும் கொலையின் நேரம்… Continue reading எல்லாம் இறுதியில் பழகிப் போய்விடும் / ஞானக்கூத்தன் கவிதைகள்

ஈ / ஞானக்கூத்தன் கவிதைகள்

கண்ணைக் கவரும் மார்பகங்கள் பார்ப்பதரிதாய்ப் போய்விட்டதென்று சுற்றிலும் பார்த்தேன் உயர்ந்த வெள்ளைத் துணிக்குள் இரண்டில் வலது பொதிந்திருந்தது அதன் மேல் ஆனால் ஒரு ஈ சாமரம் போல மார்பசைந்தது அசையாதிருந்தது நான் இடத்தை விட்டுப் போக நேர்ந்தது போய் விட்டிருக்குமா ஈ நிச்சயம் போய்விட்டிருக்கும்: இல்லை நிச்சயம் இருக்கும்: ஈ போய்விட்டிருக்கும் ஈ போய்விட்டிருக்கும் நிச்சயம் கூடப் பார்க்கப் படாத ஈ யூகத்தளவு தான் கண்ணால் எடுத்துச் செல்லப்பட்ட கண்ணைக் கவர்ந்த மார்பகத்தின் மேல் என்றும் இருக்கிறது… Continue reading ஈ / ஞானக்கூத்தன் கவிதைகள்

காகித வாழ்க்கை / ஞானக்கூத்தன் கவிதைகள்

திடீரென்று ஆனால் சர்வ நிச்சயத்துடனே அன்று தொடங்கிய எனது வாழ்வை வியக்கிறேன் திரும்பிப் பார்த்து. நான் அதைக் கேட்கவில்லை எனக்காக யாரும் கேட்கவில்லை என்பதுறுதி ஆனால் ஏனது உண்டாயிற்று? அவ் வேத கோஷத்தோடு மழை மண்ணில் இறங்கும் போது இவ் இது என் வாழ்க்கை வானி லிருந்து பொட்டலம் போல் வீழ- பொட்டல மான யானே என்னையே பிரித்துப் பார்க்கும் அதிசயம் இதன் பேரென்ன? நிச்சயத்தோடு அன்று வாழ்க்கையே தொடங்கிற் றென்றால் எங்கிருந் தாரம்பம் என்று தேடு… Continue reading காகித வாழ்க்கை / ஞானக்கூத்தன் கவிதைகள்

உபதேசம் / ஞானக்கூத்தன் கவிதைகள்

அன்பைத் தவிர வேறொரு செய்தி விளம்பத் தகுந்ததாய் உலகிலே இல்லை நீண்டதாய் எங்கும் செல்வதாய் இருக்க வேண்டும் என் அன்பு சக்கரம் பொருந்தி சுமையை எல்லாப் பொழுதும் எதிர்பார்த்துக் கொண்டு.

சும்மா / ஞானக்கூத்தன் கவிதைகள்

இறுகத் திருகியதும் கழுத்தில் துளிர்த்ததை மனத்தில் கண்டு எழுது கோலைத் தேடி எடுத்தேன் போதுமா இன்னும் ஊற்ற வேண்டுமா? மூடுதல் எளிமை திறப்பது கடினம் மூடலே கடினமாய் இருக்குமானால்? எளியதாய்த் திறந்து கொண்ட எழுது கோலின் தொண்டைக் குள்ளே ஒலிக்காத சொற்கள் போலக் குமிழிகள். ஊதிப் பார்த்தேன். ஊசியால் குத்திப் பார்த்தேன் குமிழியில் ஒன்று கூட அதற்கெல்லாம் உடையவில்லை ஊற்றினேன் மையை மை மேல் வந்தது குமிழிக் கூட்டம் வெளியிலே விழுந்தடித்து திருகினேன் இறுக்கி. அங்கே கழுத்தில்… Continue reading சும்மா / ஞானக்கூத்தன் கவிதைகள்

மிளகாய்ப் பழங்கள் மாடியில் / ஞானக்கூத்தன் கவிதைகள்

மிளகாய்ப் பழங்கள் மாடியில் உலர்ந்தன ஆசை மிகுந்த அணிலொன்று வந்தது பழங்களில் ஒன்றைப் பற்றி இழுத்து கடித்துக் கடித்துப் பார்த்துத் திகைத்தது. முதுகுக் கோடுகள் விரல்களாய் மாறித் தடுத்திழுத்து நிறுத்திய போதும் ஒவ்வொன்றாகக் கடித்துத் திகைக்க உலவைப் பழங்கள் எங்கும் சிதறின ஜன்னலை விட்டுத் திரும்பினேன் எது நடந்தாலும் கதிருக்குக் கீழென்று.

நட்டு / ஞானக்கூத்தன் கவிதைகள்

வட்டச் சந்திலும் சதுரச் சந்திலும் மூன்றுநாட் புழுதி அடைந்திருக்கும் இரும்பு நட்டொன்று எதிரில் கிடந்தது எங்கும் இனிமேல் பொருந்தாத நட்டு என்றாலும் பாரம் அதற்கொன்று உண்டு எடுத்துக் கொண்டேன் உள்ளங்கையில் உருட்டிக் கொண்டு வீட்டுக்கு வந்தேன் கிண்ணத்து நீரில் மூழ்க வைத்தேன் சாலிக்ராம பூசை செய்வதாய் அம்மா என்னைப் போற்றத் தொடங்கினாள் இனிமேல் வீட்டில் சுபிட்சம் என்றாள் மனைவி பார்த்து கெக்கலித்தாள் பிள்ளைகள் அதனை ஆசை தீரதர தெருவில் பந்தாடிக் களித்தார்கள் அதற்கு பின்பு நட்டு வலைஞன்… Continue reading நட்டு / ஞானக்கூத்தன் கவிதைகள்

பிரிவும் சேர்க்கையும் / ஞானக்கூத்தன் கவிதைகள்

என்னை நோக்கிக் கையொன்று நீண்டது. குச்சிக் குப்பை ரேகை படர்ந்த உள்ளங் கையைத் தொடர்ந்து பார்த்தேன். இல்லை யென்றும் அதற்குள் சொன்னேன். இல்லை யென்றதும் மடங்காத தனது கையை எடுத்துக் கொண்டு அவள் நகர்ந்தாள். இருப்பிடத்துக்குத் திரும்பும் பொழுது சட்டைத் துணியில் மசித் துளிக் கறை போல் அவளது கண்கள் நினைவில் எழுந்தன. பிச்சையே எடுப்பாள் என்று நினைத்தேன். இரண்டாம் வகுப்பின் கழிவறைப் பக்கம் சீட்டில்லாமல் பயணம் செய்வாள் அப்படி ஒருநாள் பார்க்கும் பொழுது கொடுப்பதாய் எண்ணினேன்.… Continue reading பிரிவும் சேர்க்கையும் / ஞானக்கூத்தன் கவிதைகள்