மஹ்ஹான் காந்தி மஹ்ஹான் / ஞானக்கூத்தன் கவிதைகள்

எழுந்ததும் கனைத்தார்; மெல்ல சொற்பொழி வாற்றலானார்: வழுக்கையைச் சொறிந்தவாறு ‘வாழ்க நீ எம்மான்’ என்றார்; மேசையின் விரிப்பைச் சுண்டி ‘வையத்து நாட்டில்’ என்றார்; வேட்டியை இறுக்கிக் கொண்டு ‘விடுதலை தவறி’ என்றார்; பெண்களை நோட்டம் விட்டு ‘பாழ்பட்டு நின்ற’ என்றார்; புறப்பட்டு நான் போகச்சே ‘பாரத தேசம்’ என்றார்; ‘வாழ்விக்க வந்த’ என்னும் எஞ்சிய பாட்டைத் தூக்கி ஜன்னலின் வழியாய்ப் போட்டார் தெருவிலே பொறுக்கிக் கொள்ள

தோழர் மோசிகீரனார் / ஞானக்கூத்தன் கவிதைகள்

மோசிகீரா மகிழ்ச்சியினால் மரியாதையை நான் குறைத்ததற்கு மன்னித்தருள வேண்டும் நீ சொந்தமாக உனக்கிருக்கும் சங்கக்கவிதை யாதொன்றும் படித்ததில்லை நான் இன்னும் ஆனால் உன்மேல் அளவிறந்த அன்பு தோன்றிற்று இன்றெனக்கு அரசாங்கத்துக் கட்டிடத்தில் தூக்கம் போட்ட முதல்மனிதன் நீதான் என்னும் காரணத்தால்

சினிமாச்சோழர் / ஞானக்கூத்தன் கவிதைகள்

“தகர்த்திடுக மாற்றரசர்கோட்டை வீரத் தமிழர்படை பகைக்குடலை மாலையாக்க குகைப்புலிகள் சினந்தெழந்து வகுத்த யூகம் குலத்தமிழர் அணியென்றே ஊது சங்கு” மிகக்கனன்று சோழர்குலத் திலகம் பேசி முடித்தஉடன் அரண்மனைக்குள் இருட்டு சூழச் சிகரெட்டைப் பற்றவைத்தார் பக்காச் சோழர். சூட்டிங்கு முடிந்தால் பின் என்ன செய்வார்?

நேற்று யாரும் வரவில்லை / ஞானக்கூத்தன் கவிதைகள்

இரண்டொரு நாட்கள் குளிப்பதற்கில்லை வைத்தியர் சொற்படி ஒருநாள் கவனம் கருதி மற்றும் ஒருநாள் உடல் நலம் கேட்டு யாரும் வருவார் திரும்பும் போது தயவு செய்தெனக்காகச் சந்து விடாமல் கதவை மூடெனக் கேட்கணும் பொருந்தி மூடாக் கதவின் சந்தில் குத்திட்டு நிற்கும் குழல் விளக்காகத் தெரிந்திடும் நீலவானை எத்தனை நேரம் பார்த்துக் கிடப்பது

வெங்காயம் / ஞானக்கூத்தன் கவிதைகள்

வியர்த்திட குருதி ஓட்டம் நேர்பட வெங்காயம் போல் ஏற்றது உலகில் இல்லை வெண்கலக் காலத்தோரும் விரும்பினார். கல்லுக்கொன்றாய்த் தின்றதால் எகிப்தியர்க்குப் பிரமிடுகள் கைகூடிற்றாம் தன்மடி வெங்காயத்தை மற்றொரு சிற்பிக்காக வீசிடும் சிற்பி பந்தைப் பிடிப்பது போல் பிடிக்கும் அங்கொரு சிற்பி என்று… தஞ்சையிற் பெரிய கோயில் கட்டினோர் எகிப்தியர்போல் தாங்களும் வெங்காயங்கள் தின்றவராக வேண்டும். மத்திய ஆசியாவில் முதன் முதல் பிறந்து பின்பு பலபல விண்ணும் மண்ணும் பார்த்ததாம் இவ்வெங்காயம். பலபல விண்ணும் மண்ணும் பார்த்தபின் எதனால்… Continue reading வெங்காயம் / ஞானக்கூத்தன் கவிதைகள்

இரட்டை நிஜங்கள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

குலத்துக்கு தெய்வம் வேறாய்க் கொள்கிற தமிழர் தங்கள் வழி காட்டித் தலைவரென்று பற்பல பேரைச் சொன்னார் என்றாலும் மனசுக்குள்ளே இன்னொருவர் இருப்பாரென்று ஆராய்ந்தேன் அவர்கள் போற்றும் தலைவர்கள் யார் யாரென்று இருந்தவர் இரண்டு பேர்கள் அவர்களின் அடையாளங்கள் நடப்பவர் பார்க்க மாட்டார் பார்ப்பவர் நடக்க மாட்டார்

கணக்குப் போட்டான் / ஞானக்கூத்தன் கவிதைகள்

கணக்குப் போட்டான் விடை பிறர்க்குத் தெரியாதிருக்க அவன் மறைத்தான் ஒருத்தன் பார்த்தால் அவனுக்குக் கண்ணிரண்டும் முஷ்டிகளாகும் பலகைகள் எல்லாம் கீழ்வைத்தார் இடைவேளைக்கும் உணவுக்கும் பள்ளிக்கூட மணி அசைய பலகை அடுக்கப் படுகிறது ஒன்றின் மேல் ஒன்றாக சரியும் தப்பும் சரியாக அவனைப் பார்த்தான் அவன் சரியாய்ச் செய்தான் என்றே கருதியதால் இவனைப் பார்த்தான் இவன் சரியாய்ச் செய்தான் என்றே கருதியதால் ஆமாம் என்று நினைத்தேன் உனதென்றாலும் எனதென் றாலும் என்ன நம்விடைகள் இன்னொன்றுக்கு பொருந்தணுமே.

தணல் / ஞானக்கூத்தன் கவிதைகள்

தெரியுமா மாமி இந்தப் பிராமணன் கதையை? வெட்கக் கேடுதான் சொன்னால் போங்கள் இத்தனை வருஷமாக இருக்கலை அநியாயங்கள் மனசொரு சமயம் வேகும். அமைதியாய் இருந்தேன் தானே ஒருவழி வருவாரென்று ராகுவின் பார்வை பட்டால் பீஷ்மனும் தாசி கேட்பான். ஜாதகம் பார்த்தேன் நாலு மந்திரம் செய்தேன் ஆனால் யாதொரு பலனும் இல்லை. தலைக்குமேல் போவதற்குள் தடுக்கலை யென்றால் மானம் என்னதும் சேர்ந்து போகும். காதிலே விழுந்ததெல்லாம் புரளியாம். எனக்கு மட்டும் நிஜமெனத் தெரியும் மாமி. ‘நேற்றுநான் உங்களோடு நின்றதை… Continue reading தணல் / ஞானக்கூத்தன் கவிதைகள்

காலவழுவமைதி / ஞானக்கூத்தன் கவிதைகள்

“தலைவரார்களேங்… தமிழ்ப்பெருமாக்களேங்… வணக்கொம். தொண்ணூறாம் வாட்டத்தில் பாசும் வாய்ப்பய்த் தாந்தமைக்கு மகிழ்கின்றேன். இன்றய்த் தீனம் கண்ணீரில் பசித்தொய்ரில் மாக்களெல்லாம் காலங்கும் காட்சியினெய்க் காண்கின்றோங் நாம்” ‘வண்ணாரப் பேட்டகிள சார்பில் மாலெ’ “வளமான தாமிழர்கள் வாட லாமா? கண்ணாளா போருக்குப் போய்வா யேன்ற பொற நான்ற்றுத் தாயெய் நாம் மறந்திட்டோமா? தாமிழர்கள் சொகவாழ்வாய்த் திட்டாமிட்டுக் கெடுப்பவர்கள் பிணாக்குவ்யல் காண்போ மின்றே நாமெல்லாம் வரிப்பொலிகள் பகைவர் பூனெய் நாரிமதி படைத்தோரை ஒழிப்போம் வாரீர் தலைவரார்களேங் பொதுமாக்களேங் நானின்னும் யிருகூட்டம் பேசயிருப்பதால்… Continue reading காலவழுவமைதி / ஞானக்கூத்தன் கவிதைகள்

நாய் / ஞானக்கூத்தன் கவிதைகள்

காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பார்ப்பான் எச்சிற் களையைத் தெருவில் எறிந்தான் ஆள் நடவாத தெருவில் இரண்டு நாய்கள் அதற்குத் தாக்கிக் கொண்டன ஊர் துயில் குலைத்து நாய்கள் குரைக்கவும் அயல்தெரு நாய்களும் ஆங்காங்கு குரைத்தன நகர நாய்கள் குரைப்பது கருதிச் சிற்றூர் நாய்களும் சேர்ந்து குரைத்தன நஞ்சை புஞ்சை வயல்களைத் தாவிக் கேட்கும் குரைச்சலின் குறைச்சலைக் கேட்டு வேற்றூர் நாய்களும் குரைக்கத் தொடங்கின சங்கிலித் தொடராய்க் குரைத்திடும் நாய்களில் கடைசி நாயை மறித்துக் காரணம் கேட்டால் என்னத்தைக்… Continue reading நாய் / ஞானக்கூத்தன் கவிதைகள்