கனவின் மனிதன் / ஞானக்கூத்தன் கவிதைகள்

ஒருவனைக் கனவில் கண்டேன் உதடுகள் பற்கள் கண்கள் தலைமயிர் நகங்கள் கை கால் அனைத்துமே மனிதன் போல இருந்திடும் அவனைக் கண்டேன் கனவிலும் மனிதன் போலத் தோன்றினால் மனிதன் தானா?

அந்தத் தெரு / ஞானக்கூத்தன் கவிதைகள்

சூத்திரர் தெருக்களென்று சொல்லுவார் ஏற்றாற்போல மாட்டுத் தோல் உலரும் ஆடு கோழிகள் நாய்கள் வாழும் முருங்கைகள் பிள்ளை வாதக் கிளைகளைத் தாழ்த்திக் கொண்டு குடிசையின் வாசற்பக்கம் ‘பசுபதி ஆறாம் பாரம்’ என்கிற சாக்குக் கட்டி எழுத்துக்கள் தெரியும் குச்சு இடச்சாரி பெரியகுச்சு மல்லிகை முல்லை சாணி முட்டைகள் முருங்கைக் காய்கள் விற்கிற பழக்கமுள்ள வீடுகள் ஆங்காங்குண்டு தனிப்பட வர மாட்டாமல் கடவுளின் துணையில் அங்கே வருகிறான் பார்ப்பான் சாமி வலம் வர வேதம்பாடி.

எழுதக் குவிந்த / ஞானக்கூத்தன் கவிதைகள்

எழுதக் குவிந்த கைபோல இருக்கும் குன்றில் ஒருபாதை மூட்டு தோறும் நீர்க் கசிவு மணிக்கட்டோரம் விளை சகதி சகதிப் பக்கம் ஒரு சப்தம் உளியின் சப்தம் செவியில் விழும் தாவும் அணிலின் முதுகின் மேல் இராம பிரானின் கைவுரல்கள் இடை வானத்தில் துணையாகும் உளியின் சப்தம் மலை முழைஞ்சில் உதிக்கும் போது ஓராண்டு கேட்கும் போது நூறாண்டு

நாள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

கொட்டிக் கொண்டு போயேன்’டா தட்டு கொண்டு வாயேன்’மா தொட்டுக் கொள்ளப் போடேன்’மா கட்டை விரலைத் தொட்டுக்கொள் பள்ளிக்கூடம் போறேன்’மா பாதை பார்த்துப் போய் வாடா கையில் கட்டித் தருவாயா கையைக் கனக்கும் வேணடாம்’டா மத்தியானம் வருவேன்’மா வெயிலில் வெந்து சாகாதே மத்தியானம் வருவேன் நான் பத்துப்பானை தேய்ப்பதற்கா?

விடுமுறை தரும் பூதம் / ஞானக்கூத்தன் கவிதைகள்

ஞாயிறு தோறும் தலைமறை வாகும் வேலை என்னும் ஒரு பூதம் திங்கள் விடிந்தால் காதைத் திருகி இழுத்துக் கொண்டு போகிறது ஒருநாள் நீங்கள் போகலை என்றால் ஆளை அனுப்பிக் கொல்கிறது மறுநாள் போனால் தீக்கனலாகக் கண்ணை உருட்டிப் பார்க்கிறது வயிற்றுப் போக்கு தலைவலி காய்ச்சல் வீட்டில் ஒருவர் நலமில்லை என்னும் பற்பல காரணம் சொன்னால் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது வாரம் முழுதும் பூதத்துடனே பழகிப் போன சிலபேர்கள் தாமும் குட்டிப் பூதங்களாகிப் பயங்கள் காட்டி மகிழ்கின்றார் தட்டுப்… Continue reading விடுமுறை தரும் பூதம் / ஞானக்கூத்தன் கவிதைகள்

பட்டிப் பூ / ஞானக்கூத்தன் கவிதைகள்

தையற்காரன் புறக்கணித்த — புது வெள்ளைத் துணியின் குப்பைகள்போல் பட்டிப் பூவின் வெண்சாதி — அதைப் பார்த்தால் மனசு நெக்குவிடும் காய்ச்சல் நீங்கிக் கண்விழிக்கும் — ஒரு கன்னிப் பெண்ணின் முதல் சிரிப்பாய் பட்டிப் பூவின் கருநீலம் — அந்தப் படுகை எங்கும் மிகவாகும் எங்கும் வளரும் பட்டிப்பூ — தன் குடும்பத் தோடும் சூழ்ந்திருக்கும் செவியின் மீதில் ரோமம் போல் — அது தனித்தும் வளரும் இப்போது முலைகள் அசையத் தான் அசையும் — ஒரு… Continue reading பட்டிப் பூ / ஞானக்கூத்தன் கவிதைகள்

உதைவாங்கி அழும் குழந்தைக்கு / ஞானக்கூத்தன் கவிதைகள்

என்ன கேட்டாய்? உன் வீட்டில் என்ன செய்தாய்? ஏதெடுத்து என்ன பார்த்தாய்? எதைக் கிழித்து வாங்கிக் கொண்டாய் அடி உதைகள்? கெட்டுப்போன பிள்ளைக்கு வெளியில் கிடைக்கும் அடி உதைகள் கெட்டுப் போகாப் பிள்ளைக்கு வீட்டில் கிடைக்கும் முன்கூட்டி அவர்கள் அவர்கள் பங்குக்கு உதைகள் வாங்கும் காலத்தில் உனக்கு மட்டும் கிடைத்தாற் போல் சின்னக் கண்ணா அலட்டாதே.

தொழுநோயாளிகள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

ஐயா உம் விரல்கள் மூன்று கிடந்தன. பெற்றுக் கொள்ளும் அம்மணி உனதும் கூட கால்களின் செதில்கள் அங்கே கிடப்பதைக் கண்டேன். உங்கள் உடம்பினை ஏனிவ்வாறு உதிர்க்கிறீர் தெருவிலெங்கும்? கங்கையில் விருப்பைக் கொஞ்சம் கைவிடச் சொன்ன நூல்கள் கேணியில் உடம்பைக் கொஞ்சம் கைவிடச் சொன்னதுண்டா? வெள்ளிக்கு முதல் நாள் ஊரை வலம் வரும் தங்கட்கின்னும் உடைமையில் கவனம் வேண்டும் அம்மணி தங்கள் மேனி சிந்தினால் யாருக்காகும்?

ஒட்டகம் / ஞானக்கூத்தன் கவிதைகள்

ஆயிரம் முறைகள் எண்ணிப் பார்த்தபின் முடிவு கண்டேன் ஒட்டகம் குரூபி இல்லை குரூபிதான் என்றால் மோவாய் மடிப்புகள் மூன்று கொண்ட அத்தையும் குரூபி தானே? அத்தையைக் குரூபி என்றோ ஒருவரும் சொல்வதில்லை சண்டைகள் வந்தாலன்றி சண்டைகள் வந்தபோது மற்றவர் அழகில் குற்றம் பார்ப்பது உலகநீதி ஒட்டகம் குரூபி என்றால் அதனுடன் உலகுக் கேதும் நிரந்தரச் சண்டை உண்டோ?

கனவு / ஞானக்கூத்தன் கவிதைகள்

மலைகள் என்னும் குறும்பற்கள் முளைத்திராத பூதலத்தின் கொக்குப் போலக் காலூன்றி நிற்கும் மரங்கள். அதற்கப்பால் எழுந்து வீழ்ந்து தடுமாறும் நடக்கத் தெரியாக் கடலலைகள் யார் சென்றாலும் விரல் நீட்டும்.