மண்ணும் மந்திரியும் / ஞானக்கூத்தன் கவிதைகள்

ராமன் கால் பட்ட பின்பு கல்லெல்லாம் பூக்களாச்சாம் அதிசயம் என்ன. எங்கள் அமைச்சர் கால் படுமுன்னேயே என்னென்ன மண்ணுக் காச்சு?

அம்மாவின் பொய்கள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

பெண்ணுடன் சினேகம் கொண்டால் காதறுந்து போகும் என்றாய் தவறுகள் செய்தால் சாமி கண்களைக் குத்தும் என்றாய் தின்பதற் கேதும் கேட்டால் வயிற்றுக்குக் கெடுதல் என்றாய் ஒருமுறை தவிட்டுக்காக வாங்கினேன் உன்னை என்றாய் எத்தனைப் பொய்கள் முன்பு என்னிடம் சொன்னாய் அம்மா அத்தனைப் பொய்கள் முன்பு சொன்ன நீ எதனாலின்று பொய்களை நிறுத்திக் கொண்டாய் தவறு மேல் தவறு செய்யும் ஆற்றல் போய் விட்டதென்றா? எனக்கினி பொய்கள் தேவை இல்லையென் றெண்ணினாயா? அல்லது வயதானோர்க்குத் தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்… Continue reading அம்மாவின் பொய்கள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

வகுப்புக்கு வரும் எலும்புக்கூடு / ஞானக்கூத்தன் கவிதைகள்

‘மாணவர்காள் மனிதர்களின் எலும்புக் கூட்டைப் பார்த்திருக்க மாட்டீர்கள் மன்னார்சாமி ஆணியிலே அதைப் பொருத்து. பயப்படாமல் ஒருவர்பின் னொருவராகப் பார்க்க வேண்டும் ஏணியைப் போல் இருந்திருப்பான். ஆறடிக்குக் குறைவில்லை இது கபாலம் மார்புக்கூடு… போணிசெய்த பெருங்கைகள்… கைகால் மூட்டு பூரான்போல் முதுகெலும்பு… சிரிக்கும் பற்கள்… சுழித்துவிடும் கோபாலன் ஆண்டு தோறும் புதுசு புதுசாய்ப் பார்ப்பான் இல்லையாடா?’ மாணவர்கள் சிரித்தார்கள் விலாவெடிக்க ஒட்டிவைத்தாற் போலிருக்கும் சிரிப்பைக் காட்டி அறைநடுவில் நின்றதந்த எலும்புக்கூடு

கொள்ளிடத்து முதலைகள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

ஒன்றிரண்டு நான்கைந்து… பத்துப் பத்தாய்… ஒரு நூறா? ஆயிரமா? கணக்கில் வாரா… கொள்ளிடத்தின் மணல்வெளியில் நடுச்சாமத்தில் கரைமரங்கள் தூக்கத்தில் ஆடும் போதில் ஒன்றிரண்டு நான்கைந்து பத்துப் பத்தாய் ஒரு நூறா? ஆயிரமா? கணக்கில் வாரா… சிறிது பெரிதாய் முதலைக் கூட்டம் சற்றும் அமைதி கலையாமல் அவை பேசிக் கொள்ளும் சில நொடிக்குள் முடிவெடுத்துக் கலையும் முன்னே குறுங்காலால் மணலிலவை எழுதிப் போட்ட மருமமொழித் தீர்மானம் என்ன கூறும்?

மஹ்ஹான் காந்தி மஹ்ஹான் / ஞானக்கூத்தன் கவிதைகள்

எழுந்ததும் கனைத்தார்; மெல்ல சொற்பொழி வாற்றலானார்: வழுக்கையைச் சொறிந்தவாறு ‘வாழ்க நீ எம்மான்’ என்றார்; மேசையின் விரிப்பைச் சுண்டி ‘வையத்து நாட்டில்’ என்றார்; வேட்டியை இறுக்கிக் கொண்டு ‘விடுதலை தவறி’ என்றார்; பெண்களை நோட்டம் விட்டு ‘பாழ்பட்டு நின்ற’ என்றார்; புறப்பட்டு நான் போகச்சே ‘பாரத தேசம்’ என்றார்; ‘வாழ்விக்க வந்த’ என்னும் எஞ்சிய பாட்டைத் தூக்கி ஜன்னலின் வழியாய்ப் போட்டார் தெருவிலே பொறுக்கிக் கொள்ள

தோழர் மோசிகீரனார் / ஞானக்கூத்தன் கவிதைகள்

மோசிகீரா மகிழ்ச்சியினால் மரியாதையை நான் குறைத்ததற்கு மன்னித்தருள வேண்டும் நீ சொந்தமாக உனக்கிருக்கும் சங்கக்கவிதை யாதொன்றும் படித்ததில்லை நான் இன்னும் ஆனால் உன்மேல் அளவிறந்த அன்பு தோன்றிற்று இன்றெனக்கு அரசாங்கத்துக் கட்டிடத்தில் தூக்கம் போட்ட முதல்மனிதன் நீதான் என்னும் காரணத்தால்

சினிமாச்சோழர் / ஞானக்கூத்தன் கவிதைகள்

“தகர்த்திடுக மாற்றரசர்கோட்டை வீரத் தமிழர்படை பகைக்குடலை மாலையாக்க குகைப்புலிகள் சினந்தெழந்து வகுத்த யூகம் குலத்தமிழர் அணியென்றே ஊது சங்கு” மிகக்கனன்று சோழர்குலத் திலகம் பேசி முடித்தஉடன் அரண்மனைக்குள் இருட்டு சூழச் சிகரெட்டைப் பற்றவைத்தார் பக்காச் சோழர். சூட்டிங்கு முடிந்தால் பின் என்ன செய்வார்?

நேற்று யாரும் வரவில்லை / ஞானக்கூத்தன் கவிதைகள்

இரண்டொரு நாட்கள் குளிப்பதற்கில்லை வைத்தியர் சொற்படி ஒருநாள் கவனம் கருதி மற்றும் ஒருநாள் உடல் நலம் கேட்டு யாரும் வருவார் திரும்பும் போது தயவு செய்தெனக்காகச் சந்து விடாமல் கதவை மூடெனக் கேட்கணும் பொருந்தி மூடாக் கதவின் சந்தில் குத்திட்டு நிற்கும் குழல் விளக்காகத் தெரிந்திடும் நீலவானை எத்தனை நேரம் பார்த்துக் கிடப்பது

வெங்காயம் / ஞானக்கூத்தன் கவிதைகள்

வியர்த்திட குருதி ஓட்டம் நேர்பட வெங்காயம் போல் ஏற்றது உலகில் இல்லை வெண்கலக் காலத்தோரும் விரும்பினார். கல்லுக்கொன்றாய்த் தின்றதால் எகிப்தியர்க்குப் பிரமிடுகள் கைகூடிற்றாம் தன்மடி வெங்காயத்தை மற்றொரு சிற்பிக்காக வீசிடும் சிற்பி பந்தைப் பிடிப்பது போல் பிடிக்கும் அங்கொரு சிற்பி என்று… தஞ்சையிற் பெரிய கோயில் கட்டினோர் எகிப்தியர்போல் தாங்களும் வெங்காயங்கள் தின்றவராக வேண்டும். மத்திய ஆசியாவில் முதன் முதல் பிறந்து பின்பு பலபல விண்ணும் மண்ணும் பார்த்ததாம் இவ்வெங்காயம். பலபல விண்ணும் மண்ணும் பார்த்தபின் எதனால்… Continue reading வெங்காயம் / ஞானக்கூத்தன் கவிதைகள்

இரட்டை நிஜங்கள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

குலத்துக்கு தெய்வம் வேறாய்க் கொள்கிற தமிழர் தங்கள் வழி காட்டித் தலைவரென்று பற்பல பேரைச் சொன்னார் என்றாலும் மனசுக்குள்ளே இன்னொருவர் இருப்பாரென்று ஆராய்ந்தேன் அவர்கள் போற்றும் தலைவர்கள் யார் யாரென்று இருந்தவர் இரண்டு பேர்கள் அவர்களின் அடையாளங்கள் நடப்பவர் பார்க்க மாட்டார் பார்ப்பவர் நடக்க மாட்டார்