பரிசில் வாழ்க்கை / ஞானக்கூத்தன் கவிதைகள்

வாரத்தில் ஒன்றிரண்டு வெளியூர்க் கூட்டம்
வரப்பார்க்கும் மணியார்டர் மாலை துண்டு
காரத்தில் பேசத்துப் பாக்கிச் சூடு
கல் பிறந்த காலத்தில் பிறந்தோர் தம்மை
நேரத்தில் களிப்பூட்ட அகநானூறு
நெய்யாற்றில் பாலாற்றில் பேசிப் பார்த்த
தீரத்தில் தெரிந்தெடுத்த நகைத்துணுக்கு
தமிழர்க்கு வேறென்ன கொடுக்க வேண்டும்

புகையூதி ரயில் வண்டி எழும்பூர் நீங்கும்
பேச்சாளர் மனதில் கையொலிகள் கேட்கும்

பேச்சாளர் வாய் திறக்க வாய் திறந்து
பழங்குடிகள் கேட்டார் தம் எளிய மூக்கின்
மூச்சுக்கு வயதுமூவா யிரமாம் என்று
முதல் முதலாய்க் கேட்டதனால் திணறிப் போனார்
வாய்ச்சிருக்கும் இந்நாளின் வாழ்வை நொந்தார்
வளம் திரும்ப வேண்டுமெனில் இவருக்கான
பேய்ச் சுரைக்காய் சின்னத்தை மறவோம் என்றார்
பெரியதொரு மாலையிட்டு வணக்கம் போட்டார்

புகையூதி ரயில் வண்டி எழும்பூர் நீங்கும்
பேச்சாளர் மனம் புதிய பேச்சைத் தீட்டும்

ஆத்தூரில் மறு கூட்டம். தலைமை யேற்ற
அதிகப்படி தமிழர் ஒரு சுருதி சேர்த்தார்
காத்தோட்டம் இல்லாத கூட்டத்துக்குப்
பேச்சாளர் சூடேற்றிப் பேசும் போதில்
ஆத்தாடி என்றொருவன் கூச்சலிட்டான்.

அடிதடிகள் பரிமாறிக் கொண்ட பின்பு
நீத்தாலும் உயிர் தொடர்வேன் என்றார். நண்பர்
விடிவதற்குள் நாளிதழில் தலைவரானார்
கும்மியடி தமிழ் நாடு முழுவதும்
குளிர்ந்திடக் கைகொட்டிக் கும்மியடி…
காணிக்கை கொண்டு வாருங்கடி… கு
லோத்துங்க சோழனைப் பாருங்கடி
நாளை அமைச்சரைப் பாருங்கடி… மவ
ராசனைப் பார்த்துக் கும்மியடி…
சென்மம் எடுத்தது தீருதடி… இந்த
சித்திரச் சாமிக்குக் கும்மியடி