உயர் மாகடல் உற்றொரு / ஞானக்கூத்தன் கவிதைகள்

சென்னை நகரத்தைச் சுற்றிப் பார்க்க
வந்தவன் போலிருந்தான்
கட்டியிருந்த வேட்டியை முழங்கால் வரைக்கும்
உயர்த்தியிருந்தான்
சாதாரணமான ஒரு சட்டை
ஒரு விலங்கின் வயிற்றை நினைவூட்டி
அவன் தோளில் தொங்கியது ஒரு பை
கடலைப் பார்த்ததும் ஒரு சந்தோஷம்
எதிரில் வந்தாரை எல்லாம் வழிகேட்டு
கடல் வந்தடைந்த சந்தோஷம்
கடலை நோக்கி அவன் பாடினான்
ஒரு ஊரின் அருமை பெருமை பற்றி
கடலிடம் சொல்லிக் கொள்ளும் ஒரு பாட்டு
கடலை நோக்கிக் கையைச் சுட்டியும்
உயர்த்தியும் அஞ்சலி செய்தும் பாடினான்
அவன் பிடிக்க வேண்டிய ரயில் வண்டி
நள்ளிரவில் தான் புறப்படும் போல
அப்படியானால் மதியச் சாப்பாட்டை
பக்கத்தில் எங்காவது முடித்துக் கொண்டு
மாலையும் கடலைப் பார்க்க அவன் வரலாம்
அப்போது கடல் மேல் நிலவு தோன்றலாம்
அவனும் பாடலாம் அதே பாடலை அல்லது
மற்றொன்றை, அல்லது சும்மா நிற்கலாம்
இப்போது அவன் சும்மா நிற்கிறான்
என்ன சொன்னதோ அவனிடம் கடல்